Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / நீதிபதி இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமையை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது கூட்டமைப்பு!

நீதிபதி இளஞ்செழியன் இலக்குவைக்கப்பட்டமையை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது கூட்டமைப்பு!

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடல் நிலை விரைவில் தேரவும், நீதிபதி இளஞ்செழியனுக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டுவரவேண்டும் எனவும், இதற்குப் பின்னணியில் இருக்கக்கூடிய சதித்திட்டங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபரை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டிருப்போர் மீது இவ்வாறான வன்முறை பிரயோகிக்கப்படுவதை நாம் கடுமையாகக் கண்டிக்கும் அதேவேளை, யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள் இப்போது இன்னுமொரு படிநிலையை அடைந்துள்ளமையானது எமது ஆழ்ந்த கவனத்தை ஈர்க்கின்றது.

சட்டம், ஒழுங்கு சீர்குலைவதில் பயன் காணக்கூடியவர்கள் இப்படியான செயல்களின் பின் மறைந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் வலுவாக எழுகின்றது.

இந்த நிலைமை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் எனவும், இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv