Tuesday , December 3 2024
Home / முக்கிய செய்திகள் / ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்

ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்

நாட்டில் இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவிட்டி குழப்பங்களை உருவாக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்குரிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“கலபொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்திவருகின்றன. அவரை கைதுசெய்வதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சிலவற்றின்மீது தீமூட்டிய சம்பவங்கள் பதிவாகின. இதுகுறித்த விசாரணைகளை அந்தந்த பகுதிக்குப் பொறுப்பான பொலிஸார் நடத்துகின்றனர்.

நுகேகொட விஜேராம பகுதியில் மட்டும் 4 வர்த்தக நிலையங்கள் மீது தீ வைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஒருவரது மகனான 32 வயதான இவர் உணகவமொன்றில் தொழில்செய்பவர். இவர் 2014ஆம் ஆண்டிலிருந்து பொதுபலசேனா அமைப்பில் இணைந்து இதுவரை அந்த அமைப்பின் அத்தனை செயற்பாடுகளிலும் பங்கேற்றுள்ளார்.

ஞானசார தேரர் மற்றும் பொதுபலசேனாவின் பங்காளிக் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருக்கிறார். ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டாம் எனக்கோரி பொரளையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் இவர் பங்கேற்றிருந்தார்.

அத்துடன், திருகோணமலையில் பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் இளைஞரொருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று திருகோணமலை தந்துரே பகுதியில் புத்தபெருமானை அவமானப்படுத்தி முகநூலில் பதிவேற்றிய முஸ்லிம் இளைஞரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் சிங்கள இளைஞர்கள் முஸ்லிம் மக்களின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சட்டத்தைக் கையிலெடுத்து செயற்படுவதற்கு எந்தவொரு குழுக்களுக்கும் இடமளிக்கப்படாது. இனவாத, மதவாதத்தைத் தூண்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv