Wednesday , August 27 2025
Home / முக்கிய செய்திகள் / சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு

சமஷ்டி கோருவது பிரிவினை அல்ல! – தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கில் பிரதம நீதியரசர் அதிரடித் தீர்ப்பு

‘சமஷ்டி’ கோரிக்கை பிரிவினை அல்ல என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகச் சிங்களக் கடும்போக்குவாத அமைப்புக்களின் பிரதிநிதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் தனிநாட்டை உருவாக்கும் கொள்கையுடன் செயற்படவில்லை” என்றும் தனது தீர்ப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு மற்றும் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அந்தக் கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்ல் அறிக்கை என்பன, 6ஆம் திருத்தத்துக்கு விரோதமாகப் – பிரிவினையைக் கோரும் வகையில் உள்ளன என்று 2014ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனோடு தொடர்புடையதாக 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முதலாவது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழரசுக் கட்சி சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முதல்நிலை ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் ஏனைய வழக்குகள் திகதியிடப்பட்டு வந்தன.
முதலாவது வழக்கு பிரதம நீதியரசர் பிரியஷாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது யாப்பில் சமஷ்டி (கூட்டாட்சி) என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தது. 1981ஆம் ஆண்டு கட்சி யாப்பில் வட சொற்களுக்குப் பதிலாக தமிழ் சொல்கள் மாற்றப்பட்டன. இதன்போது சமஷ்டி என்ற சொல்லுக்குப் பதிலாக இணைப்பாட்சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
இது சமஷ்டிக்கும் அப்பாற்பட்டது என்று முறைப்பாட்டாளர்கள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர். அது அப்படியல்ல என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதங்களை முன்வைத்திருந்தார். முறைப்பாட்டாளர்கள் கூறுவதைப் போன்று இணைப்பாட்சி என்பது சமஷ்டிக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அது பிரிவினை அல்ல. சமஷ்டியின் ஓர் அங்கமே என்று வாதம் முன்வைத்திருந்தார்.
கனேடிய உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு, கொசோவா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தீர்ப்புக்களை மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனடிப்படைஇயில், பிரதம நீதியரசர் தீர்ப்பின் சாராம்சத்தை கடந்த வெள்ளிக்கிழமை  அறிவித்தார். அதில், ‘சமஷ்டி’ (கூட்டாட்சி) கோரிக்கை பிரிவினை அல்ல என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி நாட்டுக்குள் தனிநாடு உருவாக்கும் வகையில் செயற்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv