இலங்கையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது என்றும், 109 பேர் காணாமல்போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 392 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 57 ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 18 ஆயிரத்து 612 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 928 பேர் 366 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் 484 வீடுகள் முழுமையாகவும், 5 ஆயிரத்து 227 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பெருமளவான சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனினும், மதிப்பீடு பணி இன்னும் ஆரம்பமாகவில்லை.
தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் தென்மேற்குப் பிராந்தியங்களில் கொட்டிய அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவாலேயே குறித்த பேரவலம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, 15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவினாலும் இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களிலுள்ள பிரதான பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குளங்களில் கழிவுநீர் கலந்துள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் படையினரின் உதவியுடன் அரசு மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. தொண்டர் படைகளும், அரசியல் கட்சிகளின் நிவாரணப் பிரிவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கங்கைகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றது. எனவே, மக்களை இனிவரும் நாட்களில் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இன்றும் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் அதிக மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மலையகப் பகுதிகளில் கடும் மழையுடன் கடும் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பிராந்தியங்களில் அடைமழை பெய்துவந்தபோதிலும் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. எனினும், நேற்றைய தினமும், இன்றும் கடும் மழை பெய்வதற்குரிய சாத்தியங்கள் இருப்பதாலேயே நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்ற அச்சத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் கடற்படையினர் மணல் மூடைகளை அடுக்கியுள்ளனர். அவசர நிலைமைகளைச் சமாளிக்கும் வகையில், 20 அதிகாரிகளைக்கொண்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தியவன்ன ஓயாவில் வெள்ளம் ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்ததால், நாடாளுமன்றத்துக்குள் 1992ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் வெள்ளம் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடமும் வெள்ளம் வந்திருந்தது. எனினும், பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.
கூடாரங்கள், போர்வைகள், விரிப்புகள், மழைக் காலணிகள், உயிர்காப்பு அங்கிகளைக்கொண்ட இந்த உதவிப்பொருட்கள் வாடகை விமானம் மூலம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சீனப் பிரதமர் லி கெகியாங், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.