வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 611பேர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77ஆவது அமர்வின் சிறுவர் உரிமை மாநாட்டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜெனிவாவில் இடம்பெறும் 77ஆவது ஐ.நா கூட்டத்தொடரின் சிறுவர் உரிமை மாநாடு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்ந்த விடயம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், சட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போரின்போது சிறுவர்களும், போராளிகளாகவும் ஏனைய வகையிலும் இருந்து அரசிடம் சரணடைந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனரா என்ற கேள்வி அமர்வில் எழுப்பப்பட்டது. இறுதிப் போரின் பின்னர் சிறுவர் போராளிகளாக இருந்த 594 பேர் அரச படைகளிடம் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் மறுவாழ்வின் பின்பு உறவுகளுடன் இணைக்கப்பட்டனர் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க பதிலளித்தார்.
இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண சிறுவர் நிலமை தொடர்பிலும் வடக்கில் காணாமல்போன சிறுவர்கள் தொடர்பிலும் சபை கவனம் செலுத்தியது.
இதன்போது வடக்கில் இருந்து கலந்துகொண்ட வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் ‘இறுதிப் போரின்போது 2 ஆயிரத்து 632 சிறுவர்கள் காணாமல் போனதாக முறையிடப்பட்டது. இதில் ஆயிரத்து 689 சிறுவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன சிறுவர்களில் 611பேர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எஞ்சிய சிறுவர்கள் சிறுவர் காப்பகங்களில் உள்ளனர் என்று வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள தரவுகள் உள்ளன’ எனப் பதிலளித்தார்.
இதனால் இவ்வாறு மாறுபட்ட புள்ளிவிவரங்கள் தொடர்பில் அதிர்ச்சி அடைந்து அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த சிறுவர்களும் உள்ளடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் சிறுவர்கள் தொடர்பான சட்டம் தொடர்பில் இலங்கையில் இரு மாறுபட்ட கருத்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதனால் 16 வயதா அல்லது 18 வயதா சிறுவர்களின் வயது எல்லை என்ற குழப்பகர மான தன்மையே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதேநேரம் முஸ்லீம் பெண்களின் திருமண வயது எல்லை தொடர்பில் தற்போது 14 வயதாக இருப்பது தொடர்பில் கடும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.