Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் / உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.”

– இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன்.

போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக உள்ளார். அவருக்கு எதிராக சித்திரவதை மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்கு ஒன்று தென்னாபிரிக்க மனித உ ரிமைகள் அமைப்பு ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்குக் குறித்துக் கருத்துக் கேட்டபோதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டில் நீதி, நியாயம் கிடைக்கும் என்பதில் மக்கள் முற்றாக நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடாகவே பிரேஸிலில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நோக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்காகவே முதலில் காணாமல்போனோர் விடயத்தைக் கையாளுவதற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றச் செய்தோம். ஆனால், ஒரு வருடம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

பொறுப்புக்கூறும் விவகாரம் இந்த நாட்டில் நீதி, நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்பது இந்த நல்லாட்சி அரசு வந்தும் நம்பிக்கையானதாக அமையவில்லை.

எனவே, வாய்ப்புக் கிடைத்த வெளிநாடுகளில் நீதியைத் தேடுவதைத் தவிர எமது மக்களுக்கு வேறு வழியே இல்லை. அதையே அவர்கள் செய்ய முற்படுகின்றார்கள் என நான் நினைக்கின்றேன்” – என்றார் சுமந்திரன் எம்.பி.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv