Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்

22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளனர்.

குறித்த அன்னதான மடத்திற்கான உரிமையாளர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று மாலை ஆவிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை முற்று முழுதாக கடற்படையினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் பொன்னாலை தொடக்கம் கீரிமலை வரையான கரையோரப் பிரதேசம் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற பிரதேசமாக ஆக்கப்பட்டு கடற்படையினர் மட்டுமே அங்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே பொன்னாலையில் மக்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது ஏனைய கட்டிடங்களில் இருந்த கடற்படையினர் வெளியேறிய போதிலும், இரு அன்னதான மடங்களில் மட்டும் தங்கியிருந்தனர்.

சில ஆண்டுகளில் பின்னர் மற்றைய அன்னதான மடமும் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மூன்றாவது அன்னதான மடத்தையும் விட்டு அவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.

தற்போது, பொன்னாலைச் சந்தி மற்றும் பொன்னாலை குடிதண்ணீர் விநியோகத் திட்ட வளாகத்திலும் கடற்படையினர் நிரந்தரக் காவலரண்களை அமைத்து தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv