இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள், ஐ.நா. சபையில் அறிவிக்கப்பட்டு, இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை தேவையை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதுவரை இந்த இனப்படுகொலை குறித்து, இலங்கை ராணுவத்தினருக்கு ஆதரவாக பேசிவந்த அதிபர் சிறிசேனா, முதன்முறையாக போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக பேசியுள்ளார்.
உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியேயான விஷயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளை சமாதானப்படுத்தும் வகையில் இராணுவ வீரர்கள் சிலரால் அவை நடத்தப்பட்டன. தன் மீதுள்ள கறையை ராணுவம் அகற்ற வேண்டிய நேரம் இது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில அத்துமீறிய விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகத்திற்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிரானதும் சட்டவிரோதமானதும்கூட என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.