நான் கூறவே இல்லை! தயாசிறி
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதாக தான் ஒரு போதும் கூறவில்லை என அக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடர்பில் கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கவை கட்சியிலிருந்து நீக்குவதாக நான் ஒருபோதும் கூறவில்லை. எனினும் மாநாட்டில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ள நிலையில் அதன்போது தேர்தல் காலங்களில் கட்சி சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றையதினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் தயாசிறி தம்மை கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.