ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நிலைகுலைந்தனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், மேல் மாடியை நோக்கி முன்னேறி சென்று ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிகளால் வெறித்தனமாக சுட்டனர். அவர்கள் அனைவரும் டாக்டர்கள் அணியும் கோட்டுகளை அணிந்தபடி, உள்ளே ஊடுருவி இருப்பதை கண்ட ராணுவ வீரர்கள் திடுக்கிட்டனர்.
இதுபற்றிய தகவல் வெளியானதும் அந்த இடத்துக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி அமைந்துள்ள பகுதி வழியாக இதர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. உள்ளே பல தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் ஹெலிகாப்டர் மூலம் வந்த ராணுவ கமாண்டோ படையினர், கயிற்றின் மூலம் தொங்கியவாறு மொட்டை மாடி பகுதியில் குதித்தனர்.
தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அங்கே உச்சகட்ட மோதல் நடந்து வருவதாகவும், இந்த மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் காபுல் நகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல் வெளியாகியுள்ளது.