கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக வீடுகள் கூட இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தாவில் கோயில்காடு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது:
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே இத்தாவில் கிராமம். குறித்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியே கோயில்காடு பகுதி. குறித்த பகுதியில் பிரதேச செயலகத்தால் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு காணி இல்லாத மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
குடியமர்த்தப்பட்ட மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வாழ்ந்து வருகின்ற போதும் நாம் இருப்பதற்கு தற்காலிக வீடுகள் கூட வழங்கப்படவில்லை.
இதனால் நாம் பெரும் சிரமத்தின் மத்தியில் வாழந்து வருகின்றோம். தற்காலிக வீடுகளையாவது இப்போது தாருங்கள், பின்பு நிரந்தர வீடுகளை தாருங்கள் என்று அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் அனைவரிடமும் கேட்டுவிட்டோம்.
ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கிராமத்தில் உள்ள அரசசார்பற்ற நிறுவனமான ஒரு நிறுவனம் தற்காலிக வீடுகளை வழங்குதற்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் அடிக்கல் நட்டபோதும் இதுவரை அவர்களும் அந்த தற்காலிக வீடுகளை வழங்கவில்லை.
நாம் மிகவும் மோசமான நிலையில் இங்கு வாழ்ந்து வருகின்றோம். கிணறுகள் இல்லை பிரதேச சபை நீரினை வழங்கி வருகின்றது. எமது வேண்டுகோளை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் – என்றனர்.
இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணியிடம் கேட்டபோது,
‘‘பயனாளிகள் பட்டியல் சேகரிப்பு முதல் இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து அனுமதிக்காக மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் அவர்களுக்குரிய தேவைகள் விரைவாக செய்து கொடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.