சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதல்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன.
அந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்களின் சார்பாகப் பேரம் பேசுவதற்காக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் 5 கட்சிகளை யாழ். பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைத்துள்ளன.
அத்துடன், பேரம் பேசுவதற்கான பொது ஆவணம் ஒன்றையும் மாணவர் ஒன்றியங்கள் தயாரித்து இணங்கச் செய்திருக்கின்றன.
இதனடிப்படையில் குறித்த 5 கட்சிகளும் இணைந்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளுடன் பேரம் பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய முதலாவது சந்திப்பு சஜித் பிரேமதாஸவுடன் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, பொதுஜன மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஜே.வி.பியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் குறித்த கட்சிகள் சந்திக்கவுள்ளன.