ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலத்தை மறந்து தம்மீது வீண்பழி சுமத்துவதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோடு, நேற்றைய அவரின் உரை தமக்கிருந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”ரணில் விக்ரமசிங்க 5ஆவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனை முடிவு என்று நாம் கூறமாட்டோம்.
ஏனெனில், பிரதமர் நியமனத்துக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை எமக்கு சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திய ஜனாதிபதியின் செயற்பாட்டை, நீதிமன்றமே பிழை எனக் கூறியுள்ளது.
இதனால், நாடும் பாரிய பின்னடைவை சந்தித்தது. இதற்கான பொறுப்பை மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
எவ்வாறாயினும், இந்தப் பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இந்த பணியை நாம் 2020 ஒகஸ்ட் மாதம்வரை சிறப்பாக மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்” என்றார்.