ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?
இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன.
இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + சதவீத வாக்குகளையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜே.வி.பி பெற்ற 711,000 வாக்குகளை அடிப்படையாக கொண்டு அனுர குமார திசாநாயக்க 5% வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்கூறிய மூன்று வேட்பாளர்களும் தற்போதைய சூழ்நிலையில், எவரும் 50% க்கும் அதிகமாக வாக்குகளை பெறுவது என்பது மிக கடினமான சூழ்நிலை என்பதால், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, இரண்டாவது விருப்பத் தெரிவு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது விருப்பத் தெரிவுகளின் எண்ணிக்கையின் போது, முதல் இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். தோல்வியுற்ற அனைத்து வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பங்களும் கணக்கிடப்படும், பின்னர் முதல் இரண்டு வேட்பாளர்களின் மொத்தத்தில் சேர்க்கப்படும்.
பின்னர் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 50% க்கும் குறைவாக இருந்தாலும், இரண்டாவது விருப்பத்தெரிவுகளின்படி ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
ஜே.வி.பி. வருகை
கடந்த 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணி நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறது. அந்த தேர்தலில் அவர்கள் 344,000 வாக்குகளுடன் 4% வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் நாடுமுழுவதுமாக 775,000 வாக்குகளுடன் 5.75% வாக்குகளை பெற்றது. எனவே ஜே.வி.பி இந்த முறை இன்னும் புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக முக்கிய அரசியல் கட்சிகள் மீது வாக்காளர்களுக்கு அக்கறையின்மை மற்றும் அதிருப்தி இருப்பதாகத் தோன்றும் ஒரு தனித்துவமான சூழலில் தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தல் அவர்களுக்கு தங்கள் பலத்தைக் காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஐ.தே.க. மற்றும் பெரமுன
இந்த இரண்டு பெரிய கட்சிகளும் நாட்டின் சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை ஈர்க்கும் வேட்பாளர்களை கொண்டுள்ளனர்.
சஜித் பிரேமதாச (52) மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ (70) இருவரும் குடும்ப அரசியலை மையமாகக் கொண்டுள்ளனர்.
இந்த வேட்பாளர்களில் ஒருவர் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது இலகுவான விடயம் இல்லை என்பதுடன் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்.ஏ.சுமந்திரன்
கொழும்பின் றோயல் கல்லூரியில் கற்ற 55 வயதுடைய எம். ஏ. சுமந்திரன் ஒரு தமிழ் மெதடிஸ்ட் கிறிஸ்தவர் ஆவார். அவர் தேவாலயங்களுக்குள் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். மேலும் தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருக்கும் அவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி ஆவார்.
சமீபத்தில் அரசியல் நெருக்கடியின் போது நாடாளுமன்றம் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் முக்கிய வழக்கறிஞராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக இருக்கும் எம்.ஏ.சுமந்திரன், தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் அவர் தனது சொந்த அரசியல் கட்சியின் மூலமே 10% வாக்குகளைப் பெற முடியும்.
ஆனாலும் பௌத்த பெரும்பான்மையை கொண்ட நாட்டில் தமிழ் பிரதி நிதி ஒருவரினால் இரண்டு முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காத பிற சிறுபான்மை குழுக்களிடமிருந்து வாக்குகளை சுமந்திரனால் பெற முடியுமா?
அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவருக்கு மக்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் வீண்போகாது. ஏனென்றால் மற்ற முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு இரண்டாவது விருப்பம் கொடுக்க முடியும்.
குறிப்பாக சுமந்திரனுக்கு வாக்களிக்கும் வாக்காளரின் இரண்டாவது விருப்பத் தெரிவு சஜித் பிரேமதாச என்றால் அது அவரது வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சுமந்திரன், ஒருவருக்கொருவர் தாக்கும் மற்ற முக்கிய வேட்பாளர்களைப் போன்று அல்லாமல், நேர்மறையான மற்றும் தூய்மையான பிரச்சாரத்தை நடத்தினால் அவருக்கு சிவில் சமூகத்தின் ஆதரவு கிடைக்கும்.
அந்தவகையில் அரசியலமைப்பை வலுப்படுத்தும் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கையை ஒன்றிணைக்கக் கூடிய தமிழ் வேட்பாளராக அவர் போட்டியிட்டால் 20% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அரசியலில் புதியதொரு மாற்றத்தடை ஏற்படுத்த முடியும் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.