இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட சந்தர்ப்பம் இல்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள இந்திய துணைதூதுவர் ஆ.நடராஜனின் சேவையை பாராட்டும் விதமாக யாழ். முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வொன்று யாழிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வட மாகாணசபை உறுப்பினர் அயுப் அஸ்மின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இ கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இந்தியாவை விட்டு நாம் இலங்கையில் எதனையும் செய்து விட முடியாது. ஏனென்றால் எமக்கு வருகின்ற உதவி எங்கே இருந்து வருகிறதென்று பார்த்தால் அண்மித்த நாடாகிய இந்தியாவிலிருந்து தான் வருகிறது.
எனது கட்சி சார்பாக சர்வதேச விவாகாரங்களில் நான் பொறுப்பாக செயற்படுகின்ற காரணத்தினால் சில விடயங்களை தெளிவாக சொல்ல முடியும். நாம் வேறு எந்த நாட்டுடன் பேசினாலும் இதை குறித்து இந்தியா என்ன சொல்லுகிறது என்று தான் கேட்பார்கள்.
எங்களுக்கு சர்வதேசம் என்று கூறினால் இந்தியாவும் மற்றைய நாடுகளுமே. அதில் மற்றைய நாடுகளுக்கு கூட மாற்று கருத்து கிடையாது. நான் நாடாளுமன்ற உறுப்பினராகி எட்டு வருடமாகிறது.
இந்த எட்டு வருடத்திலே பல நாட்டு தலைவர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்திய பிரதம மந்திரியை 6 தடவைகள் நானே நேரில் சந்தித்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.