ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றொரு சம்பவத்தில் 15 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை 2001-ம் ஆண்டு விரட்டியது. அதைத் தொடர்ந்து அங்கு மக்களாட்சி மலர்ந்தது.
இருப்பினும் அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு இருந்து, சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அந்த நாட்டு படையினருக்கு பக்க பலமாக உள்ளனர். அத்துடன் அங்கு இன்றளவும் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான்களை ஒடுக்க துணை நிற்கின்றனர்.
இருப்பினும் அங்கு இன்னொரு பக்கம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி, அவர்கள் தங்கள் பங்குக்கு தாக்குதல்களை நடத்தி பாதுகாப்பு படையினரையும், போலீசாரையும் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாதம் ருத்ரதாண்டவமாடி வருகிறது.
இந்த நிலையில் அங்கு நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தின் கேம்போனா பகுதியில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி பகல் 3 மணியளவில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டிருந்த மேல்சட்டை அணிந்திருந்த பயங்கரவாதி ஒருவர், அந்த குண்டுகளை வெடிக்க வைத்தார்.
அந்த குண்டுகள் மிக பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.
இருப்பினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 6 பேர் சிவிலியன்கள். இந்த சம்பவத்தால், அந்தப் பகுதி போர்க்களம் போல மாறியது.
இதில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையை ஜலாலாபாத் ஆஸ்பத்திரி நிர்வாகம் உறுதி செய்தது. படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும்.
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இருப்பினும் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் நேற்று வரை பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே இதே நங்கர்ஹார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 15 பயங்கரவாதிகள் தலைகள் துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இதுபற்றி மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அட்டவுல்லா கோக்யானி கூறும்போது, “ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடந்த உள்மோதலில் 15 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர். இது இவர்கள் எத்தனை கொடூரமானவர்கள் என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த படுகொலை சம்பவம், ஆச்சின் மாவட்டத்தின் சுர்க் அப் பஜார் பகுதியில் நடந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
நங்கர்ஹார் மாகாணத்தை பொறுத்தமட்டில், தலீபான் பயங்கரவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு வந்த நிலையில் இந்த சம்பவங்கள் அங்கு நடந்திருப்பது ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெருத்த தலைவலியை அளித்துள்ளது.