Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு முழுவதும் போராட்டங்கள்!

நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலுக்கு எதிராக வடக்கு முழுவதும் போராட்டங்கள்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்றுப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ் சேவைகள் வடக்கில் நேற்று இடம்பெறவில்லை.

அதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் காலையில் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண சட்டத்தரணிகளும் நேற்றுப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கிலுள்ள நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை. அவர்கள் நீதிமன்றங்களின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் ஆலயச் சூழலில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவத்தில் நீதிபதி தெய்வாதீனமாக உயிர்தப்பினார். எனினும், அவரது மெய்ப்பாதுகாவலர்களான பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் நேற்றுமுன்தினம் அதிகாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே வடக்கு முழுவதும் நேற்று பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டங்களும், கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

“நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது மிலேச்சத்தனமானது. மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நாட்டில் நீதித்துறைக்கே பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன? என்பதனை சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

நீதிபதியின் மீதான தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

நீதிக்காகத் துணிவாகச் செயற்படும் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி போதிய பாதுகாப்பு நீதிபதிக்கு வழங்கப்பட வேண்டும்.

இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சூட்டுச் சம்பவத்தின்போது உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் தமது நெறிமுறைக்கு ஏற்ப விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளியை சட்டத்தின் முன்கொண்டு வர வேண்டும். அனைத்து மட்டங்களிலும் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று வடக்கில் நேற்று பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளை, நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், நல்லூர் ஆலய பின் வீதியிலும் நடைபெற்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv