காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் அறவழிப் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அரசுக்கு நெருக்கடியை அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில், நாளை வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், சிவில் அமைப்புகளும், பொது அமைப்புகளும், வர்த்தக சங்கங்களும் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான தேசிய அமைப்பும்
மலையக சமூக ஆய்வு மையமும்
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இதனோடு முன்வைக்கின்றோம்” என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவரும், மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவருமான அருட்தந்தை வ.சக்திவேல் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தாலின்போது தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களை மூடி போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான போராட்டம், சொந்த நிலத்தை மீட்பதற்கான போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய போராட்டம், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முதலான போராட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலே நீண்டநாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்கள் அரசால் இதுவரையில் கவனத்தில்கொள்ளப்படவில்லை. அரசினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாளை வியாழக்கிழமை, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அன்றைய தினம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களை மூடி எமது மக்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.
இலங்கைத் தமிழர்
ஆசிரியர் சங்கம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களில் இயல்புநிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாற்றங்கள் ஏற்படுத்துவதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புகளையும், தியாகங்களையும் எமது இனம் சார்ந்த கட்சிகளும், மக்களும் செய்தபின்னரும் எதுவுமே நடைபெறவில்லை.
ஆயுதப் போராட்டம் அறவழிப் போராட்டமாக மாறி அனைத்துத் தரப்பினரும் வீதியில் நாட்கணக்காக, மாதக்கணக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது. எதையும் எவரும் கண்டுகொள்வதாக இல்லை. இத்தகைய நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து முன்னெடுக்கும் அறவழிப் போராட்டம் வெற்றியளிக்கவேண்டும்.
வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சிறப்பாக கல்விப்புலம் சார்ந்த அனைவரும் சேர்ந்து நாளை வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதோடு இதுபோன்ற முனைப்புகளைத் தொடர்ந்தும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.
அகில இலங்கை அரச
பொது ஊழியர் சங்கம்
“மக்களின் உரித்துகளுக்கான – உரிமைக்கான போராட்டங்கள் என்றும் வெற்றிபெறவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தேடுகின்ற நீண்ட நெடிய போராட்டத்தை கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்கின்றனர். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் நடத்தும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம்” என்று அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
வீணாகான குருமார் பீடம்
தாயக உறவுகளின் கடையடைப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவுகளை வழங்குமாறு வீணாகான குருமார் பீடம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் சிவசிறீ சபா வாசுதேவக் குருக்கள் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை வியாழக்கிழமை நடத்த ஏற்பாடாகியுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு தாயக மக்கள் அனைவரும் தமது மேலான ஆதரவை வழங்குமாறு குருமார் சந்நிதானம் வேண்டிக்கொள்கின்றது.
அரசுடைய கவனிப்பற்று நீண்டநாட்களாக போராடிக்கொண்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் கருத்து முரண்பாடுகளற்ற வகையில் ஒன்றுசேர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்து குருமார்களும் ஆலய சமூகத்தினரும் ஆன்மிக வலுச்சேர்க்க தமது ஒத்துழைப்புகளை வழங்கும் முகமாக அன்றையதினம் இறை சந்நிதானங்களில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகின்றோம்.
ஒருசாராராகிய நாம் ஒருபுறம் சந்தோஷத்தையும் கொண்டாட்டங்களையும் நடத்திவரும் வேளையில் மறுபுறம் எமது சகோதர உறவுகள் போர் நிறைவடைந்த பிற்பாடும் தொடர்ந்தும் அநாதைகளாக அமைதியின்றி மகிழ்ச்சியின்றி தமது துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், அவல வாழ்வாக இன்று நீண்டநாட்களாக வீதிகளில் தமது வாழ்வை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களது துன்பங்கள் விடுபடவேண்டும். அதற்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும். சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசு உடனடியாக இவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்து நடவடிக்கைகள் எடுத்தல்வேண்டும். மக்களது சாத்வீகமான போராட்டத்துக்கு இறையருளுடன் இந்து குருமார்களும் ஆலய சமூகத்தினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்ப்போம்” – என்றுள்ளது.
வடக்கு முஸ்லிம்
சிவில் சமூகம்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசின் நிலைப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் தவிசாளர் எம்.எம்.எம்.றமீஸ், செயலாளர் ஜனாபா ஜென்ஸிலா மஜீத் ஆகியோரின் ஒப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கடந்த 8 வருடங்களுக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களும், அரசியல் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், சர்வதேச சமூகமும் பல்வேறு அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்கி வருகின்ற சந்தர்ப்பத்திலும் இதுவரை மக்கள் திருப்திப்படும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டமான நிலைமையாகும்.
இவ்வாறான நிலையில், 2017ஆம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் மக்கள் பொறுமையிழந்து வீதிகளுக்கு இறங்கி, தொடர் மக்கள் போராட்டங்களே இதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்பி போராட்டங்களைத் தொடக்கியிருக்கின்றார்கள். மக்கள் என்ற ரீதியில் அவர்களால் முடியுமான மிகப்பெரிய ஆயுதம் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களேயாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நிலவிடுவிப்புத் தொடர்பில் அரசின் நிலைப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் தன்னுடைய முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஹர்த்தால் போன்றன எமது மக்களின் அன்றாட வாழ்வையே அதிகம் பாதிக்கும். அதன் மூலம் அரசுக்கோ அல்லது அரச இயந்திரத்துக்கோ அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இருப்பினும், ஒட்டுமொத்த மக்களும் இதற்கு ஆதரவை வழங்குகின்றபோது அது ஒரு மிகப்பெரிய செய்தியாக இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துச்சொல்லும் என்று நாம் நம்புகின்றோம்.
ஹர்த்தால் நடவடிக்கைகளின்போது அன்றாட மக்களின் சாதாரண வாழ்வுக்குப் பங்கம் ஏற்படாத வண்ணமும் அத்தியாவசிய தேவைகளான சுகாதார வைத்திய தேவைகள், உணவுத் தேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணமும் எமது எதிர்ப்பு நடவடிக்கை அமைதல் அவசியமாகும். அத்தோடு பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், வீதிகளில் ரயர்களை எரித்து வீதிகளைப் பழுதடையச் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் வன்முறைகளைத் தூண்டும் விதமான செயற்பாடுகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் அவசியமாகும்.
அஹிம்சை ரீதியான செயற்பாட்டின் மூலம் மக்களின் எதிர்ப்பை அரசுக்கு வெளிப்படுத்துவதை மாத்திரம் நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டுக்கு வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக அனைத்து முஸ்லிம் வர்த்தகர்களும், முஸ்லிம் மக்களும், முஸ்லிம் சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு நல்குவது சிறப்பானது என்றும் நாம் தெரிவித்து நிற்கின்றோம்” – என்றுள்ளது.
அம்பாறை மாவட்ட
முஸ்லிம்கள்
நலன்பேணும் அமைப்பு
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் ஆதரவு வழங்குகின்றோம்” என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன்பேணும் அமைப்பின் செயலாளர் ஐ.எல்.எம்.பாருக் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட நகர
சிறு வியாபாரிகள் சங்கம்
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்” என்று வவுனியா மாவட்ட நகர சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் யுகைப் கான் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட சமூக
விழிப்புணர்வுக்கான
மக்கள் அமைப்பு
அதேபோன்று வவுனியா மாவட்ட சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஷ்ணனும் தமது அமைப்பும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட அரச சார்பற்ற
நிறுவனங்களின் இணையம்
பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், சகல சிவில் அமைப்புகளும், பொது அமைப்புகளும் பேராதரவு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
வடக்கு அழககங்களின்
சங்கங்களின் சம்மேளனம்
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஹர்த்தாலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக்கொள்கின்றோம். நாளை வியாழக்கிழமை நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்று வடக்கு மாகாண அழககங்களின் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் க.நாகராஜா தெரிவித்தார்.
இளைஞர் திறன்
விருத்தி அமையம்
“தனியார் நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டு நாளைய பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல தரப்புகளும் ஒத்துழைக்கவேண்டும். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மூவின சமூகங்களின் ஒத்துழைப்புடன் இந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெறவேண்டும்” என்று இளைஞர் திறன் விருத்தி அமையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் எஸ்.சுரேன் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
“தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி அமையம் தனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, இலங்கையின் மூவின சமூகத்தினரையும் ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெறும் ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டும். தாயகத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடனும் இடம்பெறவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம். இவர்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து முன்னெடுத்துவரும் அறவழிப் போராட்டங்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். அதுவரை எம் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு பூரண ஆதரவை வழங்குவோம்.
நாளை வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு மூவின சமூகத்தினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வதுடன், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தையும் மூடி தங்கள் பூரண ஆதரவை வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.
வவுனியா மாவட்ட
பிரஜைகள் குழு
மக்கள் புரட்சியின் வரலாற்று எழுச்சியில் பங்காளியாகுமாறு வடக்கு, கிழக்கு மக்களுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
“படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றுள்ளது.
வவுனியா மாவட்ட
உள்ளூர் விளைபொருள்
விற்பனையாளர் சங்கம்
இதேவேளை, வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கமும் நாளைய பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு பேராதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.