அவசரகால நிலைப் பிரகடனம் நீக்கப்படும் வரையில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இலங்கையில் இன பதற்றநிலை தீவிரமடைந்ததையடுத்து, கடந்தவாரம்சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு, இந்தத் தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் என்று கூறியிருந்தது. எனினும், இந்தத் தடை மேலும் நீடிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ, சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தன்னால் இப்போது கூறமுடியாது என்றும், அது நிலைமைகளைப் பொருத்த விடயம் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டத்தின் கீழேயே சமூக வலைத்தளங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அவசரகால நிலைமை நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றம் அவசரகால நிலைமையை 14 நாட்கள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.