நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு இராணுவ முகாம்களுக்கு நுழைய அனுமதி வழங்குவதில்லை என இராணுவம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் அவர்கள் கலந்து கொள்ளும் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளவோ, ஆதரவளிக்கவோ, அனுசரணை வழங்கவோ போவதில்லை எனவும் இராணுவம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
சில சந்தர்ப்பதங்களில் அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மட்டுமல்லாது சிவில் செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் மற்றும் இராணுவம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகளை விமர்சித்து வருவதை காண முடிகிறது. இதன் காரணமாகவே இராணுவம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
சமாதானத்தை விரும்பும் வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையை பழுதாக்கும் வகையில் சிலர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து உரைகளை நிகழ்த்துகின்றனர்.
இதன் மூலம் அந்த மக்கள் மனத்தில் மீண்டும் யுத்தம் என்ற விஷ கிருமிகளை பரப்ப முயற்சித்து வருவதை காண முடிகிறது. நல்லிணக்க பொறிமுறைக்கு உயிரூட்ட இராணுவம் பாரிய பங்களிப்புகளை வழங்கி வருகிறது.
வடக்கு கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க அவர்கள் எதிர்நோக்கும் பல அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.