ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நீர்க்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளமை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.
தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருவதாலும், மேலும் சிலர் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டுவருவதாலும் கட்சியை முன்நோக்கி அழைத்துச்செல்வதில் கட்சியின் தலைவரான ஜனாதிபதி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். தனது பக்கம் நிற்கும் உறுப்பினர்களின் நிலைப்பாடு ‘மதில்மேல் பூனை’போல் இருப்பதால் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே காத்திரமான தீர்மானத்தை எடுக்கும் வகையில் இந்த இரகசிய சந்திப்பை மைத்திரி நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னர் இரட்டை நிலைப்பாட்டில் இருந்த சு.க. உறுப்பினர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.