Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்

பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி – மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து நேற்று முன்தினம், தீவிரமாக ஆராயப்பட்டிருந்தது.

இதனையடுத்து, திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதா, பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதா என்ற குழப்பம் தீவிரமடைந்துள்ளது.

தமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றப் பகுதியில் நடத்தப்பட்ட பேரணியின் போது மஹிந்த தரப்பினரால் தமது தரப்பினர் ஓரம்கட்டப்பட்டமை குறித்தும் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியினர் கவலையடைந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மகிந்த அமரவீர, அந்தப் பேரணியில் பேசத் தயாரான போது, பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளதுடன், இது தமது கட்சியின் பேரணி என்று அவர் கூறியதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா ஆட்சியாளரின் ஆதரவாளர்கள் எவரும், இந்தப் பேரணியில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும், பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, றோகித அபேகுணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தனர்.

பேரணி நடந்த போது, அந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்திலுமே, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களே அச்சிடப்பட்டிருந்தன.

முன்னைய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து, மகிந்த அமரவீரவிடமும், துமிந்த திசநாயக்கவிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் நிலை ஏற்படும் என்றும், அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv