ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நடைபெற்றுள்ள நிலையில் அதிருப்தி நிலையில் இருக்கும் சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசிலிருந்து வெளியேறும் தமது முடிவை அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வெளியிடவுள்ளனர் என்றும், அதன் பிறகு கூட்டரசிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்றும் அறியமுடிகின்றது.
தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என மைத்திரியுடன் உள்ள 17 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தனர். எனினும், தேசிய அரசமைப்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் டிசம்பர் 31ஆம் திகதி முடிவுக்கு வருவதால் அதுவரை பொறுமை காக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
ஆனால், அதற்கு முன்னர் வெளியேறவேண்டும் என்பதே கூட்டு எதிரணியுடன் சங்கமிக்கவுள்ள உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதைக் கருத்திற்கொண்டு கட்சித் தலைவரைச் சந்தித்து தமது முடிவை அவர்கள் எடுத்துரைக்கவுள்ளனர்.
அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதால் அக்காலப்பகுதியில் அரசில் இருப்பவர்கள் எதிரணியில் இணைந்தால் அது தமக்கு வலுச்சேர்க்கும் என மஹிந்த அணி கருதுகின்றது.
ஆகவே, நவம்பர் மாதமளவிலேயே வெளியேற்றம் சாத்தியமாகும் என்றும், வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.