எதிர்வரும் 26ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
26ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிமுதல் இரவு 7.30 மணிவரை நாடாளுமன்றம் நடைபெறும். அன்றையதினம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான கட்டளைச் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் தேர்தல்களை நடத்துவதற்கு மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான கட்டளைச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். அடுத்தவருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதாயின் அடுத்த வாரத்தில் ஒரு தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என ஜே.வி.பி. சபையில் வலியுறுத்தியிருந்தது.
இது விடயம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையில் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது. அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்துள்ளார்.