மூன்று வருட மர்மத்துக்கு விடை தேடும் தென்கொரியா!
மூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர்.
‘செவோல்’ என்ற இந்தக் கப்பல் மூன்று வருடங்களுக்கு முன், நூற்றுக்கணக்கான உயர் வகுப்பு பாடசாலை மாணவர்களுடன் தென்மேற்குக் கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமானோரை ஏற்றியமையாலும், வேகமாகப் பயணித்தபடியே திரும்ப முயற்சித்ததாலுமே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் 304 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது பேர் காணாமல் போயினர்.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் பதினாறாம் திகதி நிகழ்ந்த இந்த விபத்து தென்கொரியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில், மூழ்கிய கப்பலை வெளியே எடுத்து விபத்துக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என, பலியான மாணவர்களின் பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். மூன்று வருட தாதமத்தின் பின் இதற்கான முயற்சிகள் ஆரம்பமாயின.
இதன்படி, கடல் மட்டத்தில் இருந்து 144 அடி கீழே புதையுண்டிருந்த கப்பலை மேலே தூக்கியெடுக்கும் பணிகள் நேற்று (22) ஆரம்பமாயின. கடும் முயற்சியை அடுத்து இன்று காலை அந்தக் கப்பலின் பாகங்கள் கடலுக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன.
460 அடி நீளமுள்ள இந்தக் கப்பலை கடலை விட்டு அகற்றும் பணியில் சீன நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. இதற்காக 33 தூண்களை கடலுக்குள் நிறுவியும், 66 ஹைட்ரோலிக் ஜெக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இக்கப்பலை முழுமையாக அகற்றுவதற்கு சுமார் இரண்டு வார காலமாகும் என்று நம்பப்படுகிறது.
இக்கப்பல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்ட பின்னர், விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் எனவும், மூன்று வருட மர்மத்துக்கு இதன் மூலம் விடை கிடைக்கலாம் எனவும் நம்பப்படுவதாக குறித்த சீன நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்தார்.

