Tuesday , July 8 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வா? காங்கிரஸ் மறுப்பு

சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வா? காங்கிரஸ் மறுப்பு

சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.

இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த சோனியா காந்தியிடம், ‘தலைவர் பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க உள்ள உங்களுடைய பணி இனி என்னவாக இருக்கும்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, ‘என்னுடைய அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. உடல்நலனை கருத்தில் கொண்டு இனி ஓய்வு பெற விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

அவருடைய இந்த அறிவிப்பு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோனியா காந்தி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டார் என செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

சோனியா காந்தி கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து மட்டும் தான் விலகி உள்ளார். அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவார். பொது வாழ்வில் இருந்து அவர் விலகவில்லை.காங்கிரஸ் கொள்கைகள் மீதான அவருடைய ஆழ்ந்த அறிவும், அனுபவமும் எங்களை தொடர்ந்து வழிநடத்தும்.

அவருடைய ஆசியுடன் நாங்கள் செயல்படுவோம். எனவே அவரின் இந்த முடிவு குறித்து யாரும் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Check Also

உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், …