யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச்சம்பவம் இலங்கையில் நீதித்துறைக்கு சவால் விடும் நோக்கில் அமைந்துள்ளதாக ஊவா மாகாண அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் நல்லாட்சி இடம்பெற்று வருகின்றது. அதேநேரம் வடக்கில் யுத்த சூழ்நிலை இல்லாதொழித்து மக்கள் எவ்வித அச்சசும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மீதான இத்தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் நீதித்துறை என்பது மிகவும் முக்கயமானதொன்றாகும்.நாட்டில் நீதி துறையானது சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செற்பட்டால் மாத்திரமே நாட்டில் நீதி நிலை நாட்டப்படும். அதனடிப்படையிலேயே இலங்கையின் நீதித்துறையும் செயற்பட்டு வருகின்றைது.
அவ்வாறு இருக்கையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் ஏற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும். நீதிபதி இளஞ்செழியன் மிகவும் நேர்மையான ஒரு நீதிபதி மற்றும் வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் பாரபட்சமின்றி அரிப்பணிப்புடன் சேவையாற்றும் ஒரு நீதிபதியாகவும் இருந்து வருகின்றார். பல சிக்கலான வழக்கு விசாரணைகளையும் விசாரித்து நேர்மையாக தீர்ப்பு வழங்கி வருகின்றார்.
இவ்வாறு நேர்மையாக சேவையினை வழங்குபவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். ஆகவே,இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.