செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதிலிருந்து நீண்ட காலமாக அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். மேலும், புதிய அமைச்சரவைப் பட்டியலில் திண்டுக்கல் சீனிவாசன் பெயரானது முதல்வருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் கவனித்து வந்த நிதித் துறையை முதல்வராக பதவியேற்க இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கூடுதலாக கவனிக்க இருக்கிறார்.
மற்றபடி, ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் அதே துறையின் அமைச்சர்களாக தொடர்கின்றனர்.