சசிகலாவிற்கு எதிராக பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது – செங்கோட்டையன் பதிலடி
சசிகலாவிற்கு எதிராக பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த தேதி வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அதன் பின் அதிமுக கட்சி மற்றும் ஆட்சியின் போது நடந்த மாற்றங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறினார்.
இந்நிலையில், பி.எச். பாண்டியன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக மூத்த தலைவர்களான செங்கோட்டையன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
செங்கோட்டையன் கூறியதாவது:-
பதவி பெரிதா, கட்சி பெரிதா என்றால் கட்சி தான் பெரிது. கட்சி பெரிது என்று செயல்படுகிற இயக்கம் தான் அதிமுக. 1977 முதல் கட்சியில் இருந்து வருகிறேன்.
1987-ல் எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது. அப்போதும் கட்சியில் குழப்பத்தை விளைவித்தவர் பி.எச்.பாண்டியன்.
பி.எச். பாண்டியன் கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது. ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடருவதற்கு பி.எச்.பாண்டியன் தான் காரணம். திமுக ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்டவர்.
சசிகலா தேர்வை ஒன்றரை கோடி தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் பதவி அளித்த இயக்கம் அதிமுக.
உச்சநீதிமன்றம் சென்று ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு அளிக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தவர் பி.எச்.பாண்டியன். சசிகலா ஆட்சி பொறுப்பு ஏற்பதை யாரும் தடுக்க முடியாது. நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சொல்வதை நம்ப வேண்டும்.
ஒற்றுமையோடு இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் அதிமுக. அதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு கூறினார்.