முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, விசாரணைகளுக்கான நாளை மஹிந்த தெரிவிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே மஹிந்தவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரு ஜயசூரிய வழங்கிய வாக்குமூலத்தின் போது, கீத் நொயார், கடத்தப்பட்ட விடயத்தினை தாமே மஹிந்தவிடம் தெரிவித்ததாக கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பான முறையான தெளிவுகள், சந்தேகத் தீர்வு போன்றவற்றிக்காகவே மஹிந்தவிடம் புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா, முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உட்பட பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் கூட விசாரணைகளின் தன்மை எவ்வாறு அமையும் என்பது வெளிப்படையில்லை.
காரணம் கீத் நொயார் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் விவகாரத்தில் குற்றவாளி யார்? என்பது தெரியும், ஆதாரங்களும் உள்ளன என பல அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் கூட அவை ஆதாரங்களா சுய விமர்சனங்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இழுபறியாகியுள்ள மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படுமா என்ற முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.