Monday , August 25 2025
Home / முக்கிய செய்திகள் / மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித 

மஹிந்த அரசின் மோசடிகள்: ‘ட்ரயல் அட்பார்’ மூலம் விசாரணை! – இனித்தான் அதிரடி நடவடிக்கை என்கிறார் ராஜித 

“மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக மேல்நீதிமன்றத்தில் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது”  என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதைச் செய்வதற்கு அரசமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“விசேட நீதிமன்றத்தை அமைப்பதென்பதும், தற்போதுள்ள நீதிமன்றக் கட்டமைப்பைப்  பலப்படுத்துவதென்பதும் இரண்டு விடயங்களாகும். இதன்படி விசேட நீதிமன்றத்தை அமைப்பதாக இருந்தால்தான் அரசமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். இது எனக்கும் தெரியும்.
ஆனால், நாட்டிலுள்ள மேல்நீதிமன்றங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ மறுசீரமைப்புக்குட்படுத்தி ஊழல், மோசடிகள் குறித்து “ட்ரயல் அட்பார்’ முறையில் நாளாந்தம் விசாரணை நடத்தலாம். இலங்கையில் அப்படி நடந்தும் உள்ளது. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டபோதும் “ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட்டனர். இந்த வழங்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் மட்டும் ஆஜராகவில்லை.
நாட்டிலுள்ள நிபுணத்துவம்பெற்ற சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர். இவை அனைத்தும் சட்டப்புத்தகத்தில் உள்ளன.
எனவே, புதிதாக ஒன்றையும் செய்யவேண்டியதில்லை. உயர்நீதிமன்றம் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக இருந்தால்தான் அரசமைப்பைத் திருத்தவேண்டும். மேல்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு  பலப்படுத்துவதற்கு அவ்வாறு செய்யவேண்டியதில்லை. இது பற்றி நிபுணர்களும் கூறியுள்ளனர். அமைச்சரவையில் இதுபற்றி கூறினேன். இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசரும், சட்டமா அதிபரும் இணக்கம் தெரிவித்தால் இந்த விசாரணையை முறைமையை ஏற்படுத்தலாம்.
“ட்ரயர் அட்பார்’ முறையில் இரண்டு வாரங்களில் தீர்ப்பு வந்துவிடும். ஆட்சேபனைகள் இருந்தால் அது குறித்து மேன்முறையீடு செய்யமுடியும்.
“ட்ரயல் அட்பார்’ முறையில் விசாரணை நடத்த முடியாவிட்டால் மேல்நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரித்து அவற்றின் ஊடாக செய்யலாம். முடியாதென்று இல்லை. செய்யக்கூடிய அமைச்சர் இருந்தால் இதை நிச்சயம் செய்யலாம். மாறாக, அரசமைப்பை தூக்கிப்பிடித்து விமர்சித்துக்கொண்டிரப்பது அழகல்ல.
அரசமைப்பு என்பது நிர்வாணத்தை மூடுவதற்கான ஆடையோ அல்லது நடக்க இருப்பவற்றைத் தடுப்பதற்கான கருவியோ அல்ல.
எனவே, ஊழல், மோசடிகள் தொடர்பில் ‘ட்ரயல் அட்பார்’ முறையில் காலை, மாலையென இரண்டு வேளைகளும் விசாரணை நடத்தி அதை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் நடக்கும். இனித்தான் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்” – என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv