சிறிலங்காவின் முப்படைகளுடனும் இணைந்து செயற்படும் வகையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதியதொரு பதவியை உருவாக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
இந்தப் புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்காக தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்களைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய பதவியை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டம் தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
1500 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நாடெங்கும் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை போன்ற நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின் விநியோகம், துறைமுகச் செயற்பாடுகள், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை முடக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது, நிலைமைகளை கையாளுவதற்காக, முப்படைகளையும், காவல்துறையையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் வகையிலேயே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவி வழங்கப்படவுள்ளது.