ஒவ்வோர் ஆண்டும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானை நினைந்து மனம்,வாக்கு,மெய்யால் வழிபாடு இயற்றுகின்ற மரபை இந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இக்காலப்பகுதியில் அதிகாலை வேளையில் எழுந்து நீராடி, தோய்த்துலர்ந்து ஆடைகள் அணிந்து அடியவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். சைவ ஆசார முறைப்படி உணவு சமைப்பர். வாழை இலையில் பழம், பாக்கு, வெற்றிலையோடு அன்னமிட்டு அதற்கு உகந்த கறிகளைச் சேர்த்து சனீஸ்வரனுக்கு நிவேதனம் செய்வர். காகத்துக்குச் சாதம் வைத்து வழிபாடு இயற்றுவர்.
சிவனருள்
சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவரே சனீஸ்வர பகவான். இவர் காசிக்குச் சென்று தன் பெயராலேயே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தினமும் வழிபாடு இயற்றி வந்தார். அதன் பயன்கொண்டே கிரகபதவி யையும் அடைந்தார். அதுமாத்திரமன்றி சிவனிடமிருந்து ஈஸ்வர பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
கிரகங்களுள் ஈஸ்வர பட்டம் பெற்ற பெருமைக்குரியவராகவும் தாமத குணமுடையவராகவும் சனீஸ்வரன் திகழ்கின்றார். ‘மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி’ என்னும் நாமகரணங்கள் கொண்டு அழைக்கப்படுகின்றார். சனீஸ்வரனுக்குப் பிரியமான உலோகம் இரும்பு. அதுவிதமே பிரியமான மணியாக நீலத்தையும், தானியங்களுள் எள், மலர்களுள் கருங்குவளை மற்றும் சுவை உணர்வில் கசப்பையும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்.
விருப்பு
எள் கலந்த உணவிலும், நல்லெண்ணெய் கொண்டு ஒளியூட்டப்படும் விளக்கிலும் அதீத விருப்புடையவர். கருணைக் கடலானவர். பயமற்றவர். விரும்பிய பயன்களை அருள்வதில் காமதேனு போன்றவர். காலச் சக்கரத்தைப் பிளப்பதில் கதிரவனைப் போன்றவர்.
சக்தியுடையோன்
ஸ்ரீ சனிபகவான் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர். தனக்கென்று தனி ஆதிக்கமும் கொண்டவர். தன் பார்வையினாலேயே நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் வல்லமை உடையவர். வில்லைப் போன்று ஆசனத்தில் வீற்றிருப்பவர். நீலநிற மேனி உடையவர். முடி தரித்தவர். சூலமும், வில்லும், விரதமும், அபயமும் கொண்ட நான்கு கரங்களை உடையவர். கரு மலரையும் நீலமலர் மாலையையும் புனைபவர். கருநிறக்குடையும் கொடியும் கொண்டவர். மேருவை வலம் வருபவர்.
சஞ்சாரம்
வாழ்க்கையில் ஒருவருக்குப் பொங்குசனி வந்துவிட்டால், பொன்னும் பொருளும் வந்து சேரும். மங்கு சனி வந்துவிட்டால், நோய் நொடி துன்பங்கள் ஏற்படும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆயுள்க் காலம் முடிவடைவதற்குள் அவர்களுடைய ராசியில் ஏழரை வருட காலம் சஞ்சாரம் செய்பவராக சனீஸ்வர பகவான் விளங்குகிறார்.
நளன் – தமயந்தி கதை – வேட தம்பதியர்
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் உறங்கினான்.தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விடயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.
பிறவிப் பயன்
சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லோருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் சுயம்வரம் காண வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.
தேவர்கள் செய்த சூழ்ச்சி
தமயந்தியைப் பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம் நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.
ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூடச் சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” எனக் கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
அயோத்தியாவை சேர்ந்த நிசத் அரசனுக்கு நளன் மற்றும் குவாரா என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.நிசத் அரசர் இறந்தவுடன், நளன் அரசனானார். பல்வேறு ராஜ்ஜியங்களைக் கைப்பற்றி புகழை அடைந்தார். இந்த சந்தர்ப்பத்திலே சகோதரனான குவாரா நளன் மீது பொறாமை கொண்டார். சூதாட்டம் தான் நளனின் பலவீனம் என்பதை நன்கு அறிந்திருந்தவராக சூழ்ச்சி செய்தார்.நளனை தாய விளையாட்டுக்கு போட்டி போட அழைத்தார். இந்தப் போட்டியில் நளன் அனைத்தையும் இழந்தான்.
வனவாசம்
இதனால் அரசனான குவாரா, நளனை அந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேற்றினார். இதனால் வனவாசம் செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் நளன்.காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.தன் மனைவியையும் மாமனார் வீடு செல்ல பணிந்தும் தமயந்தி சாகும் வரை உங்களுடனேயிருப்பேன் எனக் கூறினாள்.
ஆனாலும் தமயந்தி உறங்கும் சமயத்தில் அவளைத் தனிமையில் விட்டுவிட்டு அவ்விடமிருந்து நீங்கினான் நளன். மறுநாள் அதிகாலையில் கண்விழித்துப் பார்த்த தமயந்தி, நளன் அவ்விடம் தன்னைத் தனிமையில் விட்டுச் சென்றமை குறித்து மனம்
வருந்தினாள்.நடுக்காட்டில் தனிமையாகத் தவித்தாள். இந்த நிலையிலே தமயந்தியை மலைப்பாம்பு சுற்றிக்கொண்டது. அவ்விடம் வந்த வேடன் கருணைகூர்ந்து அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். அவனிடமிருந்து தப்பித்த தமயந்தி சேதி நாட்டை அடைந்து பணிப்பெண்ணாக வேலை செய்தாள். பின்பு தந்தையின் உதவியோடு அவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தாள்.
கார்கோடகன் அருள்
தமயந்தியைப் பிரிந்த நளன் காட்டு வழியே தனியாகச் சென்று கொண்டிருந்த போது,‘நளன், தயவு செய்து இங்கே வரவும்’ என உதவி நாடி அழும் குரல் ஒன்று கேட்டது. அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்றான். காட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்ததை கண்ணுற்றான். தன்னை அழைத்தது ஒரு பாம்பு என்பதையும் தெரிந்து கொண்டான். ‘நான் தான் கார்கோடகா,பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றவும்.’ என பாம்பு நளனிடம் உதவி கோரியது. அதுவிதமே கார்கோடகனை தீயில் இருந்து காப்பாற்றினார் நளன்.
திடீரென சற்றும் எதிர்பாராத வகையில் நளனைப் பாம்பு தீண்டியது. பாம்பின் விசம் நளனின் உடம்பில் ஏறியதால், அவர் உருக்குலைந்து போனார்.இதனால் அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தார் நளன்.எனினும் அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த நளன், அயோத்தி மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். நளன் அயோத்தியில் இருப்பதை அறிந்துகொண்ட தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.
சனீஸ்வரர் அருள்
அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட துன்பங்க ளுக்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார்.
நளனும் அதை ஏற்றுக் கொண்டான். “சனீஸ்வரரே! நான் பட்ட துன்பங்களை எவருமே அனுபவிக்கக் கூடாது. என் மனைவிக்கு ஏற்பட்ட துன்பகரமான நிகழ்வுகள் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக்கூடாது.” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.அதுவிதமே இக் கதையைப் படிப்போர்க்கு சனி தோஷம் விலகும் என்பது ஜதீகம்.
ஆகவே, இத்தகு அருள் சிறப்புகள் நிறைந்த புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானை நினைந்து விரத அனுட்டானங்களைக் கடைப்பிடித்து, வாழ்வில் சகல சம்பத்துக்களையும் சௌபாக்கியங்களையும் பெற்று இன்பமாக வாழ்வோமாக.