ஐக்கிய தேசிய முன்னணியுடன் எழுத்துமூல உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னரே, ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்தே, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஐ.தே.முன்னணி பிரேரிக்கும் பிரதமரை ஆதரிப்பதாக கையொப்பமிட்டனர்.
கிட்டத்தட்ட அந்த கையெழுத்து, வெற்றுத்தாளில் இடப்பட்ட கையெழுத்தாக அமைந்து விட்டதா என்ற சந்தேகம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரிடம் ஏற்பட்டு விட்டது. எழுத்துமூல உத்தரவாத நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பின் தலைமை பின்வாங்குவதாக தெரிகிறது. நேற்று நேர்காணல் ஒன்றில் இதை இரா.சம்பந்தன் குறிப்புணர்த்தியுமுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இதேவிதமான கருத்தை இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார். “இப்போதைய நிலைமையில், எழுத்துமூல உத்தரவாதம் வாங்குவது ஐ.தே.கவை தோல்வியடைய செய்யலாம்“ என இரா.சம்பந்தன் அந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.பிக்கள் வலியுறுத்தி கேட்ட பின்னரே, “அதை நாங்கள் வாங்கலாம்“ என இரா.சம்பந்தன் சொல்லியிருந்தார். ஆனால், எழுத்துமூல உறுதிமொழி வாங்குவதில்- வாங்கினாலும், அதை எம்.பிக்களிடம் பகிரங்கப்படுத்துவதில்- இரா.சம்பந்தன் விருப்பமுடையவராக தெரியவில்லையென்பது தெரிகிறது.
ஐ.தே.முன்னணிக்கு ஆதரவளிப்பதென கடிதம் வழங்குவதற்கு முன்னதாக கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். அப்போது எழுத்துமூல உத்தரவாதம் வழங்க ரணில் சம்மதித்திருந்தார். இப்போதுள்ள நெருக்கடி நிலைமையில் எப்படியான உத்தரவாதம் கேட்டாலும் அவர் தர தயாராகவே இருக்கிறார். 2019 பெப்பரவரி 4ம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பின் நகல் வடிவத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்பதும் எழுத்துமூல உத்தரவாதத்தில் ஒரு அம்சம்.
இந்த தகவல் தமிழ்பக்கமும் வெளியிட்டிருந்தது. தமிழ், சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. குறிப்பாக, மஹிந்த ஆதரவு சிங்கள ஊடகங்கள் இதை ஊதிப்பெருப்பித்தன. சுதந்திரதினத்திற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க தமிழீழம் வழங்கப் போகிறார் என விமல் வீரவன்ச கூறித் திரிந்ததும், இதன் பின்னர்தான்.
இப்படியான நிலைமையில், எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை வழங்கினால், ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தோல்வியடைவார் என இரா.சம்பந்தன் கருதுகிறார். அதில் நியாயமும் இருக்கிறது. அரசியலமைப்பு நகல் வடிவத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்ற உத்தரவாதத்தையே, தமிழீழத்திற்கான உத்தரவாதமாக மஹிந்த தரப்பு திரிக்கும் போது, எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்பட்டால், ரணில் தமிழீழ சாசனத்தை எழுதிக்கொடுத்து விட்டார் என்றுதான் பிரசாரம் செய்யப்படும். அது நிச்சயம் ஐ.தே.கவிற்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும்.
இந்த நோக்கு நிலையிலிருந்து பார்த்தால், இரா.சம்பந்தன் சிந்திப்பது சரிதான்.
ஆனால், தனியே ஐ.தே.கவை வெல்ல வைப்பது மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலக்கு அல்லவே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் வெல்ல வேண்டும். இலக்குகளும் அடையப்பட வேண்டும்.
ஏற்கனவே, ரணில் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு சமயத்திலும் இப்படியொரு உத்தரவாதம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இப்போது, மீண்டும் இன்னொரு உத்தரவாதம் வழங்கப்படும் சமயம்.
கூட்டமைப்பு 2015 ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்தது. நல்லாட்சி அரசை உருவாக்கி, அரசியல் தீர்வு காணப்படுமென்பது அன்றைய கனவான் ஒப்பந்தம். ஐ.தே.கவின் பிரமுகர்களே அதனையும் வழங்கியிருந்தார்கள். ஆனால், மூன்றரை வருடத்தில் இலக்கு எட்டப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சியில் எதுவுமே நடக்கவில்லையென்றல்ல. வரைபொன்று தயாராகியுள்ளது. இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இந்த அரசின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் அது நிறைவேறும் சாத்தியமில்லை.
ஆக, ஒன்றேயொன்று நடக்கலாம். அரசியல் தீர்வு வரைபு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்ப்பால் அது கைவிடப்படலாம். அரசியல் தீர்வை யார் எதிர்க்கிறார்கள் என்பதை செயல்பூர்வமாக நிரூபிக்க ஒரு வாய்ப்பாக மட்டும் இதை பாவிக்கலாம். ஆனால், யார் எதிர்க்கிறார்கள் என்பதை காண்பிக்க, தமிழர்கள் இவ்வளவு காலத்தையும், சக்தியையும் செலவிட வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது.
இத்தனை முறை கனவான் ஒப்பந்தங்களிற்கு நடந்த அனுபவங்களிலிருந்து, இம்முறை எழுத்துமூல உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ளலாமல்லவா?