புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது,
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் பயனடையும் பொருட்டு புதிய அரசமைப்பை அமைப்பது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன.
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெற்றாக அந்த அரசமைப்பு அமைய வேண்டும்.
மலையகத்தில் உள்ள அனைத்தும் அமைப்புக்களும் ஒன்றிணைந்துச் செயற்படுவதுடன், மலையக மக்களின் தேவைகள், விருப்பங்கள், அபிலாசைகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.இதன்மூலமே மலையக மக்கள் வாழ்வில் ஆரோக்கியமானதோர் சூழலை அனுபவிக்க முடியும்.
ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும், சுவீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் உருவாக்கப்படும் அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
அரசமைப்பை உருவாவதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை அமைப்புக்களும் வடக்கு, கிழக்கு அமைப்புக்களும் பூரண ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.