வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் விசேட கூட்டங்கள் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கடசித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தற்போதைய நிலையில் நடத்த அரசுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் மன்னார், வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி முல்லைத்தீவில் விசேட கூட்டம் ஒன்று ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முல்லை அரச அதிபரும் படையினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
20ஆம் திகதி காலை யாழ்ப்பாணித்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மாவைசேனாதிராஜா மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணி விவகாரம் தெடார்பில் இராணுவ அதிகாரிகள், யாழ். அரச அதிபருடன் கலந்துரையாடி காணிகளையும் பர்வையிடப்பவுள்ளனர். அன்றைய தினம் மாலை கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் காணிவிடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, முள்ளிக்குளம் தொடர்பிலும் கடற்படை தளபதி மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இக் கூட்டங்கள் முடிவடைந்தப் பின்னர் ஆராயப்பட்ட கருமங்கள் தொடர்பில் மீண்டும் பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்தில் கூடி பேசவுள்ளோம். இதன்போது வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காணிகள் தொடர்பில் ஒரு பட்டியலை தயாரித்து கொடுக்கவுள்ளோம். அதன் அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண உள்ளோம் என்றார்.