வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென்றும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை முதலமைச்சரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.