சாக்ஷி மாலிக் புகாருக்கு அரியானா மாநில அரசு மறுப்பு
கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்குக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. இந்த நிலையில் சாக்ஷி மாலிக் நேற்று முன்தினம், ‘அரியானா அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை இன்னும் காப்பாற்றவில்லை. இந்த அறிவிப்பு எல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா’ என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
அவரது குற்றச்சாட்டை அரியானா அரசு மறுத்துள்ளது. அந்த மாநில விளையாட்டுத்துறை மந்திரி அனில் விஜ் இது குறித்து கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய அன்றே அவருக்கு ரூ.2½ கோடிக்குரிய காசோலையை வழங்கி விட்டோம். வேலை வாய்ப்பை பொறுத்தவரை, அவர் ரோடாக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் பணி வேண்டும் என்று கேட்டார்.
அதற்கான நடைமுறைகள் நிறைவடைய கொஞ்சம் காலம் பிடிக்கத்தான் செய்யும். நாங்கள் எல்லா விதமான ஒப்புதலும் வழங்கி விட்டோம். மகரிஷி பல்கலைக்கழகமும் அவருக்கு பணி வழங்குவதற்கு என்று விதிமுறையில் சில மாற்றம் செய்து இருக்கிறது. அவர் இந்த பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயக்குனராக நியமிக்கப்படுவார். அதற்குரிய கடிதம் இன்னும் 3-4 நாட்களில் அவருக்கு வழங்கப்படும்.
அவரது பயிற்சியாளருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தோம். ஆனால் பயிற்சி பெற்றதாக 3-4 பயிற்சியாளர்களின் பெயரை வழங்கினார். நாங்கள் அவரிடம் ஏதாவது குறிப்பிட்ட பயிற்சியாளரின் பெயரை மட்டும் பரிந்துரை செய்யும்படி கூறினோம். இதுவரை அதை செய்யவில்லை. எங்களால் எல்லா பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க முடியாது’ என்றார்.