தமது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார காணிகளுக்காக வீதியில் போராடிவரும் வடக்கு- கிழக்கு மக்களின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்கு பின்னரான மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில், அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பொதுமக்களில் 20 பேரின் வாழ்வாதார மற்றும் குடியிருப்பு நிலங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, புணானை, புச்சாங்கேணி, தியாவட்டவான், கிரான், முறக்கொட்டாங்சேனை, கொம்மாதுறை, மயிலம்பாவெளி, குருக்கள்மடம், ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, ஆயித்தியமலை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, பாலமுனை, பாலமீன்மடு, பெரியபோரதீவு ஆகிய இடங்களிலுள்ள தனியார் வாழ்விட மற்றும் வாழ்வாதாரக் காணிகள் இன்னும் படையினராலும் பொலிஸாராலும் விடுவிக்கப்படவில்லை.
முறக்கொட்டாஞ்சேனை பாடசாலைக் காணியும் படையினரின் வசமுள்ள நிலையில், அதனை மாணவர்களின் பாவனைக்கு கையளிப்பதற்கு அவர்கள் இதுவரை முன்வரவில்லை. இது குறித்து பலதடவைகள் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும் இதுவரை தீர்வு கிட்டவில்லை.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அர்ப்பணிப்பு அளப்பரியது என்பதை இந்த நல்லாட்சி அரசாங்கம் மறந்துவிடக் கூடாது” என்று அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.