ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980–ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து, ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (வயது 93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.
ஆனால், முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார். இதில் உட்கட்சி மோதல் வெடித்தது. ராணுவம் களத்தில் குதித்தது.
கடந்த 15–ந் தேதி அதிபரின் அதிகாரத்தை ராணுவம் அதிரடியாக பறித்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். பதவி விலக மறுத்த நிலையில் முகாபே ராஜினாமா செய்ததாக ஜிம்பாப்வே பாராளுமன்றம் அறிவித்துள்ளது. அவர் பதவியை ராஜினாம செய்ததை தொடர்ந்து முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமையன்று மக்களும் முகாபேவுக்கு எதிராக அணிவகுத்து மாபெரும் எழுச்சி பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முகாபே ராஜினாமா செய்ததையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.