ஆர்.கே. நகர் தொகுதியில் டிசம்பர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.
இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது.
எனவே இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி அ.தி.மு.க. என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் காஞ்சீபுரத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என மக்கள் கருதுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
இது நியாயத்திற்கு கிடைத்த தீர்ப்பு. இதனை மக்கள் வரவேற்றுள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.