அதிமுகவில் இருந்து கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்ட முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கம்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதையடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், முனுசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர். நாளுக்கு நாள் இந்த ஆதரவு பெருகிறது.
11 எம்.எல்.ஏக்கள், 12 எம்பிக்கள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு 12 எம்பிக்கள், 11 எம்.எல்.ஏக்கள் தற்போது வரை ஆதரவு அளித்துள்ளனர். அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், பொன்னையன், சங்கரன்கோவில் முத்துச்செல்வி உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
பொருளாளர் பதவி பறிப்பு ஏற்கனவே முதல்வர் ஓபிஎஸ் வசம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல் அவைத் தலைவர் மதுசூதனன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
ஓபிஎஸ் நீக்கம் இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்திருந்தார். அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் செயல்பட்டதாக கூறி சசிகலா நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆதரவாளர்கள் நீக்கம் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேபி முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன், பரிதி இளம்வழுதி, ப. மோகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, சங்கரன்கோவில் முத்துச்செல்வி, முத்துராமலிங்கம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.