ரஜினி ரசிகர் மன்றத்தின் மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, மகளிரணி அணியினருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாகக் கூறினார். பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி இருக்கும் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், பெண்களுக்கு தமது கட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக ஆளுநர் 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து எனவும், எனினும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்ப்பு அளித்துள்ளதாகவும் ரஜினி தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை, கர்நாடகாவில் புதிதாக அமையவுள்ள அரசு மதித்து செயல்பட வேண்டும் எனவும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் முயற்சி வெற்றி பெறட்டும் எனவும் குறிப்பிட்டார்.