இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலபரப்பேனும் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
அம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைமுகாமாக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முற்றுமுழுதான பாதுகாப்பு இலங்கையின் கடற்படை வசமானது. சீனர்கள் அம்பாந்தோட்டையில் அத்துமீறினால் என்ன செய்ய முடியும்? என்றும் சிலர் கேட்கின்றனர். அதற்குதான் இராணுவம் அங்குள்ளது. இராணுவம் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.
இதேவேளை, மத்தல விமான நிலையம் தொடர்பில் ஏன் இந்திய நிறுவனமொன்றுடன் பேச்சுகளை நடத்துகின்றோமென அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். எமக்கு தனியாக விமானங்களை இங்கு கொண்டுவர முடியாது. விமான நிலையத்தின் பாதுகாப்பு இலங்கை விமானப் படைக்கு உரித்தாகவுள்ளது.
இந்தியாவுடன் விசேட பாதுகாப்பு உறவுகள் எமக்கு உள்ளன. இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலப்பரப்பேனும் எவருக்கும் வழங்கப்படாது. அதேபோல், இந்தியாவும் எமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் அவர்களின் நிலப்பரபை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். அந்தப் பின்புலத்தில்தான் நாங்கள் செயற்படுகின்றோம்; என்றார்.