சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்கிரம, மற்றும் அதிகாரிகளும் புதுடெல்லிக்குப் பயணமாகின்றனர்.
இன்று மாலை புதுடெல்லியை வந்தடையும் சிறிலங்கா பிரதமர் தாஜ் பலஸ் விடுதியில் தங்குவார்.
நாளை காலை தாஜ் பலஸ் விடுதியில் சிறிலங்கா பிரதமரை, இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
அதையடுத்து நாளை பிற்பகல் 1 மணியளவில் ஹைதராபாத் இல்லத்துக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா பிரதமர் சந்திப்பார்.
நாளை பிற்பகல் 4 மணியளவில், தாஜ் பலஸ் விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
இதையடுத்து நாளை மறுநாள் காலை 11.30 மணியளவில், இரண்டரை நாள் பயணத்தை மேற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சிறிலங்கா பிரதமர் செல்லவுள்ளார்.
சனிக்கிழமை வரை அவர் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார். சனிக்கிழமை பிற்பகல் புதுடெல்லி திரும்பும் ரணில் விக்கிரமசிங்க, மாலை 6.45 மணியளவில் கொழும்புக்கு புறப்படுவார்.