புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு நிபுணர்களால் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவணத்தின் மொழி பெயர்ப்புக்களை படித்துப் பார்ப்பதற்கு நேரம் போதாது என்றும் கால அவகாசம் தேவை எனவும், மகிந்த அணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் வலியுறுத்தின.
ஆனால் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அப்படியானால் இந்த வரைவு ஆவணத்தை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப் போகின்றேன் என்று மிரட்டியதை அடுத்து மகிந்த அணியும், சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் பணிந்தன.
வழிநடத்தல் குழுவின் கூட்டம் தலைமை அமைச்சர் தலைமையில் நேற்றுக் கூடியது. சுமார் 45 நிமிடங்கள் கூட்டம் இடம்பெற்றது. கூட்டத்தில் கடும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஒருநாடு என்ற சொல்லை தான் கூறவில்லை என்றும் ஒற்றையாட்சி என்றே கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்ததுடன் அதனையே தனது கட்சியின் நிலைப்பாடாக பின்னிணைப்பில் சேர்க்குமாறு நேற்றுக் கூறியுள்ளார்.
இதன்போது, மகிந்த அணியில் தினேஸ் குணவர்த்தனவும், சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியில் சுசில் பிரேம ஜயந்தவும், வரைவு ஆவணத்தின் மொழிபெயர்ப்புக்களைப் படித்துப் பார்ப்பதற்கு நேரம் போதவில்லை. மேலதிக காலம் தேவை என்று கூறி கடிதம் ஒன்றைச் சமர்பித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நீங்கள் குழப்ப விரும்பினால் இங்கே குழப்பாதீர்கள். முழு நாட்டுக்கும் தெரியத்தக்கதாக நாடாளுமன்றத்தில் இந்த வரைவு ஆவணம் வந்த பின்னர் குழப்புங்கள். வழிநடத்தல் குழுவில் குழப்பங்களுக்கு இடமளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதன்போது தலையிட்ட தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, வரைவு ஆவணத்தை பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துகின்றேன் என்று கூறியுள்ளார். இதன்போது மகிந்த அணியினர், அப்படிச் செய்யவேண்டாம் என்று கூறியதுடன், அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும் நாடாளுமன்றத்தில் முன்னரே திட்டமிட்டவாறு 7ஆம் திகதி சமர்பிக்க இணங்கினர்.