ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மாற்று வழிகளை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன் ஐ. தே. கட்சியின் முழு ஒத்துழைப்புடனேயே மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம் பெற்றதாக கூறிய அவர், அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் இந்த மோசடியுடன் தொடர்புப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களே இன்று சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாஸ இதுவரை குறித்த மோசடி தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறு தெரிவித்தால் அவருக்கு கட்சியின் ஆதரவு கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்றம் பெற்றால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, தான் சிறை செல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதேபோல முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமையினை ரத்து செய்வதற்கான அரசியல் சூழ்ச்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர் , அதன் தொடர்ச்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மாற்று வழியினை பிரயோகித்தாவது பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று தகுந்த பாடம் கற்பிக்கும் பிரதமருக்கு கற்பிக்கும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.