சஜித்துக்கு ரணில் விட்டுக்கொடுத்தது ஏன்?
தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பையும் சஜித் பிரேமதாசவிடம் ரணில் விக்கிரமசிங்க ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
லிந்துலை மட்டுக்கலை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே அரசாங்கத்தின் நிதி அறிக்கையை தோற்கடித்து, அதன்மூலம் பிரசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு எதிர்கட்சி முற்பட்டது எனினும், அதற்கான வாய்ப்பையும் நாம் இல்லாது செய்தோம் என்ரும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அதனை செலுத்துவதற்காகவே நிதி அறிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நிதி அதிகாரம் ஜனாதிபதியின்கீழ் வந்துவிடும் என்றும், அதன்பின்னர் நிதி முகாமைத்துவம் உரிய வகையில் இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் எமக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டதாலேயே நாம் புதிய கட்சியை ஆரம்பித்த நிலையில் அவர்களில் சிலர் தங்களுடன் இணைந்து தற்போது கூட்டணியாக பயணிப்பதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, முரண்படவேண்டிய அவசியமில்லை என்றும், தொகுதி பங்கீடு பற்றியும் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்ட அமைச்சர் அது தொடர்பில் அரசியல் சபையே முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலின்போது பொறுப்பை சஜித்திடம் ரணில் வழங்கியபோது தோல்வி ஏற்பட்டதாக கூறிய அவர் இம்முறையும் தோல்வி உறுதியென்பதாலேயே பொதுத்தேர்தலை வழிநடத்தும் பொறுப்பும் சஜித்திடம் ரணில் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.