ஜனாதிபதி வேட்பாளராக இவரே களமிறங்கலாம்? ரணில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலகுவில் வெற்றிகொள்ள கூடியவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவை பெற்றவருமான சஜித் பிரேமதாசவை இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றும் சஜித்தை களமிறக்குவதற்கு பிரதமர் மறைமுகமான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவ்வாறு எந்தவொரு பிளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கிடையாது. கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது.
அதையே அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதை கட்சியின் பிளவு என அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. எவ்வாறு இருப்பினும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு உடன்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க, ரணில் விக்கிரமசிங்க இடம் கொடுக்க மாட்டார் என பேசுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ கட்சியை தோல்வி நோக்கி கொண்டு செல்லும் எண்ணம் கிடையாது. அவர்களுக்கும் கட்சியை வெற்றிப்பெற செய்யவே வேண்டும் எனவே கையில் உள்ள வெற்றியை தவறவிட அவர்கள் விரும்பமாட்டார்கள்.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் முடிவடைந்துள்ளது.
அந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வியூகங்கள் குறித்து பிரதமர் சஜித்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
சஜித்தை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் இணக்கப்பாட்டையும் பிரதமர் எதிர்பார்க்கின்றார். அதனால் அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை பெறுமாறு சஜித்தை அறிவுறுத்தியுள்ளார்.
இதை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது சஜித்தை களமிறக்க பிரதமர் மனதளவில் இணங்கியுள்ளமை புலனாகின்றது. இதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்வாரத்துக்குள் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.