அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்த்து, அமைச்சரவையில் 30 பேரை நியமிக்கலாமென பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகரிக்கக் கூடாதென்பதில் ஜனாதிபதி மைத்திரி உறுதியாக உள்ளார். எனினும், அதுதொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 106 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டுள்ள நிலையில், தேசிய அரசாங்கம் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாருடனும் ஆட்சியமைக்காதென ஜனாதிபதி மைத்திரி உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கு ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்திருந்தது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.